search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்- இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா?
    X

    தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்- இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா?

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மோதும் முதல் ஆட்டம் சவுத்தம்டனில் நாளை நடக்கிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
    சவுத்தம்டன்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 6 ஆட்டம் முடிந்து விட்டது. இன்று 7-வது ஆட்டம் நடக்கிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை இன்னும் ஆட்டத்தை தொடங்கவில்லை.

    இந்தியா மோதும் முதல் ஆட்டம் சவுத்தம்டனில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் வங்காளதேசத்துக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தினார்கள். முதல் 2 ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் சந்திக்கும்.

    வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடியதால் லோகேஷ் ராகுல் 4-வது வரிசையில் ஆடுவார்.

    இங்கிலாந்து ஆடுகளங்கள் அதிகமாக பவுன்ஸ் ஆவதால் பேட்டிங் மேன்கள் மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டும். தொடக்க வீரர்கள் ரோகித்சர்மா, தவான் மற்றும் விராட்கோலியின் ஆட்டத்தை பொறுத்து ரன் குவிப்பு இருக்கும். டோனி, ஹர்த்திக் பாண்ட்யாவிடம் அதிரடியான ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

    கேதர் ஜாதவ் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. அவர் விளையாடாவிட்டால் ஜடேஜா அல்லது விஜய்சங்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும். வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமதுசமி அல்லது புவனேஸ்வர்குமார் இடம் பெறலாம். சுழற்பந்தில் குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் தேர்வு பெறுவார்கள். 5-வது பவுலராக ஹர்த்திக் பாண்ட்யா, விஜய்சங்கர் அல்லது ஜடேஜாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ஆடுகளத்தின் தன்மையை குறித்து வீரர்கள் தேர்வு இருக்கும். பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

    பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலியும், பந்துவீச்சில் பும்ராவும் அணியின் துருப்பு சீட்டாக உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 104 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 21 ரன்னில் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தது.

    ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்த்து இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

    வீரர்களின் காயத்தால் அந்த அணி பலவீனப்பட்டு காணப்படுகிறது. முன்னணி பேட்ஸ்மேனான ஹசிம் அம்லா, வேகப்பந்து வீரர்களான ஸ்டெய்ன், நிகிடி ஆகியோர் காயத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த 3 பேரும் ஆட மாட்டார்கள் என தெரிகிறது.

    2 ஆட்டத்தில் தோற்றதால் தென்ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் கடுமையாக போராடும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனமாக காணப்படும் அந்த அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இந்த போட்டித் தொடரை பொறுத்தவரை எந்த அணி எப்போது அபாரமாக விளையாடும் என்பதை கணிக்க முடியவில்லை.

    உலக கோப்பையை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா சாதகமான நிலையிலேயே இருக்கிறது. 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஒரே ஒரு ஆட்டத்ல் வென்று இருக்கிறது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செஞ்சேரியனில் நடந்த போட்டியில் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
    Next Story
    ×