என் மலர்
உலகம்

வர்த்தக போர்: பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம்.. சீனாவுடன் புதிய ஒப்பந்தம் போடும் அமெரிக்கா
- சீன இறக்குமதிகளுக்கு 245% வரை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா வரிகளை விதித்தது.
- அமெரிக்காவின் 1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க உதவும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பை எதிர்த்து சீனா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இரு உலக வல்லரசுகளும் ஒருவருக்கொருவர் வரிகளை உயர்த்தினர்.
சீன இறக்குமதிகளுக்கு 245% வரை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா வரிகளை விதித்தது. அதே நேரத்தில் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரை வரிகளை விதித்துள்ளது. மேலும் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை சீனா நிறுத்தியது.
இதனால் இரு தரப்பிலும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால் அமெரிக்கா - சீனா பேசுவார்த்தை நடத்த இறங்கியது. அதனபடி கடந்த 2 நாட்கள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்தேறின.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவிற்கும், துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான சீனக் குழுவிற்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், சீனாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்கள் திங்கட்கிழமை பகிரப்படும் என்றும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து அதிபர் டிரம்ப் இடம் முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், "சீனாவும் அமெரிக்காவும் பயனடைவதையும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவின் சந்தை திறந்திருப்பதையும் நாங்கள் காண விரும்புகிறோம். பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!" என்று குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் 1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்று அமெரிக்க அதிகாரிகள் வட்டம் கூறுகிறது.