என் மலர்
உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி
- ரிமோட் கண்ட்ரோல் குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- 2025 ஆம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்குப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் கூறி தனி நாடு கேட்டு நீண்டகாலமாக பல ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கேச், பஞ்ச்கூர் மற்றும் துர்பத் ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பஞ்ச்கூரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட சாலையில் ராணுவ வாகனம் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களுக்குப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுச் குடியரசு காவலர்கள் ஆகிய அமைப்புகள் கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன.
துர்பத் பகுதியில் ராணுவத்தினர் பயன்படுத்தி வந்த தகவல் தொடர்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆயுதக் குழுக்கள் வெடிபொருட்கள் மூலம் தகர்த்துள்ளன.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தான் முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இதில் இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






