என் மலர்
இலங்கை
- இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.
- இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என கூறினார்.
கொழும்பு:
இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தேவையான உதவிகளை வழங்கியது. என்னுடைய மக்கள் சார்பாகவும் மற்றும் எனது சொந்த அடிப்படையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இலங்கைக்கு ஒரு வலுவான மற்றும் பரஸ்பரம் அதிக பயனுள்ள நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மலையக மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசாங்க வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.
கொரோனா பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி செய்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
- இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
- கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களை தூண்டி விடும்.
கொழும்பு :
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த மாத தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் கடும் கொந்தளிப்புடன் அதிபர் மாளிகை மற்றும் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். முதலில் மாலத்தீவு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்ப உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களை தூண்டி விடும். அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. முன்னாள் அதிபர் கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை. ஒரு வேளை அவர் நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்" என கூறினார்.
இதனிடையே கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில் அவரது சகோதரர்களான மஹிந்தா ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 2-ந்தேதி வரை நீடிக்கப்பட்டது.
அதன்படி மஹிந்தா ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைய இருந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
- இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டை ஆட்டம் காண செய்து உள்ளது.
- என்னை சிலர் வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டை ஆட்டம் காண செய்து உள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 9-ந்தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் இல்லத்தை சேதப்படுத்தியதுடன் தீ வைத்தும் கொளுத்தினார்கள். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு ஓட்டம் பிடித்தார். தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கையை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆனாலும் அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு செல்லும் வரை போராடபோவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கண்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை சிலர் வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் போராட்டம் எதிலும் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் எனக்கு செல்ல வீடு எதுவும் இல்லை.
என்னை வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி ஏன் போராட்டம் நடத்தி நேரத்தை வீணடிக்கிறீர்கள். முதலில் போராட்டக்காரர்கள் எரிக்கப்பட்ட எனது வீட்டை மீண்டும் சீரமைத்து தர முயற்சி செய்ய வேண்டும். வீடு எதுவும் இல்லாத என்னை வீட்டுக்கு செல்லும் படி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் வீட்டை சீரமைக்கட்டும் அல்லது நாட்டை சீரமைக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.
இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து செயல் பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளை சீன கப்பல் மேற் கொள்கிறது.
- இலங்கைக்கு சீன கப்பல் வருகை குறித்து இந்தியா கண்காணிப்பு.
கொழும்பு:
இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் அடுத்த மாதம் சீன ஆராய்ச்சி கப்பல் யுவான் வாங்கை நிறுத்துவதற்கு அந்நாட்டு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கெனல் நளின் கரத், பல நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ளார். இதே சூழலில் சீனக் கப்பலுக்கு நாங்கள் அனுமதியும் வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இலங்கை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11ந் தேதி முதல் நிறுத்தப்படும் சீன ஆராய்ச்சி கப்பல் செப்டம்பர் வரை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீன கப்பல் இலங்கை வருகை குறித்து கவனமுடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன ராணுவத்தின் தலையீட்டிற்கு இடமளிக்க கூடாது என்று அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள், இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளன.
- கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு:
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேக்கு எதிரான மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் அவர் மறுநாள் (14-ந்தேதி) சிங்கப்பூருக்கு சென்றார்.
அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார்.
இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசு, கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளதாகவும், அவருக்கு தங்கள் நாட்டில் தங்கியிருக்க 14 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா கடந்த 28-ந்தேதி முடிவடைந்த நிலையில் அவருக்கு மேலும் 14 நாட்கள் விசா நீட்டிப்பை சிங்கப்பூர் அரசு வழங்கியது. இதன் மூலம் அவர் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பிறகு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு ராஜபக்சேவின் கட்சி ஆதரவு அளித்தது. மேலும் அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்களும் ராணுவம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு ராணுவம், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்களின் போராட்டம் அடங்கி இருக்கும் சூழலில் கோத்தய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இனப்படுகொலை குற்றச்சாட்டில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு ஐ.நா. சபை அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்து உள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி கோத்தபய ராஜபக்சே எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் மீது இலங்கை அரசும், சர்வதேச இண்டர் போல் அமைப்பும் எந்த புகாரும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
- ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளது.
- இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவுமில்லை என உலக வங்கி கூறியுள்ளது.
கொழும்பு :
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் பதவியை ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சிகளும் இணைந்த வலுவான அரசு அமைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார். இதற்கு வசதியாக மந்திரிசபையையும் அவர் இன்னும் விரிவாக்கம் செய்யவில்லை.
இலங்கையில் 30 மந்திரிகள் வரை நியமிக்க வாய்ப்பு உள்ள நிலையில், வெறும் 18 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் ஆளும் இலங்கை மக்கள் கட்சி அல்லாத பிற கட்சிகளில் இருந்து 2 பேர் மட்டுமே மந்திரிகளாக உள்ளனர்.
எனவே தனது தலைமையிலான அரசில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கி விட்டார்.
அந்தவகையில் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியுடன் நேற்று முன்தினம் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவ்வாறு நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு அனைத்துக்கட்சி அரசு உருவாக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஆனால் ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசாவின் சமாகி ஜன பலவகேயா அறிவித்து உள்ளது. எனினும் அந்த கட்சி எம்.பி.க்கள் சிலர் தனித்தனியாக அரசை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் டல்லஸ் அழகப்பெருமாவை ஆதரித்து இருந்தாலும், அரசில் இணைய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் அனைத்துக்கட்சி அரசு அமைப்பதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், இதற்காக குறுகிய காலம் மட்டுமே அரசு காத்திருக்கும் என்றும் சட்டத்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜனநாயகத்திற்குள் நம்பிக்கை உணர்வை மீண்டும் ஏற்படுத்தவும், இலங்கைக்குள் இருக்கும் சமூக-அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கவும் அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அதிபரின் கொடியை அவமதித்ததாக எதிர்க்கட்சி வர்த்தக யூனியனின் முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அதிபர் மாளிகையில் அத்துமீறி நுழைந்ததுடன், அதிபரின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியதை அவர் வீடியோவில் வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக உலக வங்கியுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி கூறியுள்ளது.
- இலங்கையில் அவசர நிலை சட்டம் அமலில் உள்ளது.
- இது ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுகிறது.
கொழும்பு:
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த 19-ம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலகவேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமலில் உள்ள அவசர நிலை சட்டம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற மறுநாளே அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
- நாட்டின் சட்டத்தின்படி அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சேவை விரட்டியடித்தனர்.
இதையடுத்து புதிய அதிபராக பாராளுமன்றம் மூலம் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். அவருக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற மறுநாளே அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கி இருந்த கூடாரங்களை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாட்டின் சட்டத்தின்படி அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அதே உரிமை உண்டு. நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அதிபராக பதவியேற்றுள்ளேன். பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா முன்வந்துள்ளதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சமந்தா பவர் கூறும்போது, 'இந்தியா ஏற்கனவே 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடனை வழங்கியதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன்.
சீனா, இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. 2000-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கான கடன்களை வழங்குவதில் சீனா பிரதானமாக இருந்து வருகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான காரணியாக இருக்கும் சீன கடனை மறு சீரமைப்பதில் சீனா சாதகமாக பதில் அளிக்காது என கருதுகிறோம்.
- கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது.
- ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், கடந்த 9-ந்தேதி அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த 13-ந்தேதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். அங்கும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால் மறுநாள் (14-ந்தேதி) சிங்கப்பூருக்கு சென்றார்.
சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசாங்கம், கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளார்.
அவர் அடைக்கலம் கேட்கவில்லை என்றும் அவர் சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. அவர் சிங்கப்பூரில் தங்கிருப்பதற்கான அனுமதி நாளையுடன் முடிகிறது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே தங்குவதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில், "கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது. அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித் தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனா கூறும்போது, கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி னசொறதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார் என்று நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருள்கள் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொழும்பு:
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவற்றை ஆக்கிரமித்தனர். எனினும் பின்னர் அவர்கள் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக வெளியேறினர். எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார் சேத விவரங்களை ஆய்வு செய்தனர். இதில் அதிபர் மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைபொருள்கள் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை ஆசாமிகளாக அவர்கள் 3 பேரும் அதிபர் மாளிகையில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை கொக்கிகளை திருடி சென்றதாகவும், ராஜகிரியா நகரில் உள்ள கடையில் அவற்றை விற்க முயன்றபோது போலீசில் பிடிப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
கல்லே:
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 315 ரன்களை எடுத்திருந்தது. சண்டிமால் 80 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டிக்வெலா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷாதிக் டக் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 16 ரன்னும், இமாம் உல் ஹக் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் 24 ரன்னும், பவாத் ஆலம் 24 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஆகா சல்மான் பொறுமையுடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது.
கொழும்பு:
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில குதித்தனர்.
அதிபர் மாளிகை அருகே பொதுமக்கள் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் உச்சகட்டமாக கடந்த 9-ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.
அங்கு சில நாட்கள் தங்கியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றவுடன் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதிபர் மாளிகை அருகே முகாம் அமைத்து போராட்டம் நடத்தியவர்களை ராணுவத்தினர் அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர்கள் அமைத்து இருந்த கூடாரங்களை பிரித்து எறிந்தனர்.
பின்னர் அதிபர் மாளிகையை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது. மேலும் அதனை சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடந்தது
தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் முதல் அதிபர் மாளிகை இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல பணிகள் நடந்தது.
இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இலங்கையில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகள் இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.






