என் மலர்
உலகம்

பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட சல்மான் கான்?.. பாகிஸ்தான் விளக்கம்
- ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
- பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
ரியாத் நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.
தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர்.
இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்" என பாகிஸ்தானையும், பலுசிஸ்தானையும் இருவேறு பகுதிகளாக பிரித்து பேசியிருந்தார்.
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் 4வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சல்மான் கானின் பெயர் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் (NACTA) தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லை. உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அல்லது மாகாண அரசிடமிருந்தோ அவர் 4வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் இல்லை.
தற்போதைய செய்திகள் அனைத்தும் இந்திய ஊடகங்கள் அளித்த தவறான செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு தொடர்புடைய நிறுவனங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.






