என் மலர்
இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. விளக்கத்துடன் பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பிய இந்தியா
- தண்ணீரைத் தடுக்கும் எந்தவொரு செயலும் போர் நடவ்டிக்கையாகும் என்றும் பாகிஸ்தான் கூறியது.
- ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதனபடி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை நேற்று இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செயல்படுத்த, இந்தியா தடைகளையும் அணைகளையும் கட்ட வேண்டியிருக்கும். இதனால் பெரும் செலவும், தாமதமும் ஏற்படும்.
ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் நோக்கத்துடன், இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
முன்னதாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததை பாகிஸ்தான் நிராகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரைத் தடுக்கும் எந்தவொரு செயலும் போர் நடவடிக்கையாகும் என்றும் பாகிஸ்தான் கூறியது.
பாகிஸ்தானில் நடந்த உயர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகா எல்லையை மூடுதல், பாகிஸ்தான் வான்வெளியை மூடுதல், இந்தியாவுக்குச் சொந்தமான விமான நிறுவனங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடை செய்தல் மற்றும் இந்திய குடிமக்களுக்கான விசாக்களை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவுசெய்யப்பட்டது.






