என் மலர்
உலகம்

இந்தியா உடனான மோதல் எதிரொலி: தூதரகங்களில் விசா சேவையை நிறுத்தியது வங்கதேசம்
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.
இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகம், வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு தடையில்லை என தெரிவித்தார்.






