என் மலர்
உலகம்

அல் நக்பா: 77 ஆண்டுகளாக தொடரும் துயரம் - பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்
- ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948ல் பிரிட்டன் வெளியேறியது.
- சியோனிச போராளிகள் ராணுவ படை (Zionist paramilitaries) பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கினர்.
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசா போரில் இரு பக்கங்களிலும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
இந்த பிரச்சனை இன்று தொட்டு சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி பயங்கரவாத கொடுமைகளில் இருந்து தப்பி வந்த்வ பல்லாயிரக்கணக்கான யூதர்களும் பாலஸ்தீனத்தில் தங்கள் புதிய வாழ்வை கட்டமைத்துக்கொண்ட காலகட்டம் அது.
பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தபோது அரபிக்களும், யூதர்களும் இருந்த பாலஸ்தீனம் இரண்டாகப் பிரியும் சூழல் உருவானது.
யூதர்களுக்கு இஸ்ரேல், அரபிக்களுக்கு பாலஸ்தீனம், புனித நகரான ஜெருசலேம் சர்வதேச நகரமாக இருக்கும் என்பதுதான் பிரிட்டன் பரிந்துரைத்த யோசனை. இந்த யோசனையை ஐ.நா.வும் அங்கீகரித்தது.
ஆனால், பாலஸ்தீன அரபிக்கள் இதனை ஏற்கவில்லை. ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948ல் பிரிட்டன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்கள். அதன் நீட்சியாக போர் மூண்டது.
1947 மற்றும் 1949 க்கு இடையில், சியோனிச போராளிகள் ராணுவ படை (Zionist paramilitaries) பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கினர். பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 530 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டன.
குறைந்தது 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக மாறினர். இதனை பாலஸ்தீனியர்கள் அல் நக்பா (பேரழிவு) எனக் கூறுகின்றனர். இந்த துயரத்தை நினைவு கூற வருடந்தோறும் மே 15 நக்பா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் 77வது நக்பா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இன்று வரை இந்த துயரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நக்பா தினத்தன்று ஒரே நாளில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளது.






