search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    பாராளுமன்ற கலவரம் - அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்கும் முயற்சிக்கு சொந்த கட்சியினரும் ஆதரவு

    அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்டு டிரம்பை உடனடியாக நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு டிரம்பின் குடியரசு கட்சியினரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். 
    ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

    தேர்தல் முடிவை பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் தேர்தல் சபை உறுப்பினர்களின் ஓட்டுகளை எண்ணி முறைப்படி அறிவிப்பது வழக்கம்.

    இதற்காக பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஜோ பைடன் வெற்றியை எதிர்க்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் திடீரென கட்டுப்பாடுகளை மீறி பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புப்படையினர் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    எனவே துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். போலீசார் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார். இதனால், வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  

    கலவரத்தையடுத்து பாராளுமன்ற கூட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு கலவரம் கட்டுக்குள் வந்தது. பின்னர் மீண்டும் சபை கூடியது. ஓட்டுகள் எண்ணப்பட்டு ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தூண்டுதலே காரணம் என்று கூறப்படுகிறது. அவர் டுவிட்டர் தளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து தகவல்களை அளித்து கொண்டிருந்தார். 

    அதனால் தான் கலவரம் உருவான தாக கூறப்பட்டது. இதனால் அவரது டுவிட்டர் தளம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. டிரம்பின் பேஸ்புக் பக்கமும் முடக்கப்பட்டது.

    டிரம்பின் செயலுக்கு அமெரிக்க தலைவர்கள் பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர். இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்களும் கண்டித்தனர்.

    அமெரிக்க வரலாற்றில் டிரம்ப் கறையை ஏற்படுத்தி விட்டதாக அமெரிக்க மக்கள் பலரும் கருத்துகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

    புதிய அதிபராக ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளார். எனவே டிரம்பின் பதவி காலம் இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது.

    அதிகாரம் கையில் இருப்பதால் டிரம்ப் இந்த நாட்களில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், சிக்கலான உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என கருதுகின்றனர்.

    கோப்பு படம்

    எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அரசியல் சாசனம் 25-வது சட்ட திருத்தத்தின்படி ஜனாதிபதி ஒருவர் தனது கடமையை செய்ய தவறினாலோ, நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டாலோ அவரை பதவியில் இருந்து நீக்கலாம்.

    இதை பயன்படுத்தி டிரம்பை பதவி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் முயற்சியை கையில் எடுத்துள்ளனர். பிரதிநிதிகள் சபை தலைவர் பெலோபியும் டிரம்பை நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    இதற்கு டிரம்பின் குடியரசு கட்சியினர் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியரசு கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆடம் கின்சிங்கர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மேரி லேண்டு, வெர்மான்டு மாகாணங்களை சேர்ந்த குடியரசு கட்சி கவர்னர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அந்த கட்சியின் பல தலைவர்களும் டொனால்டு டிரம்பை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதிபரை நீக்க வேண்டும் என்றால், துணை ஜனாதிபதி சம்மதிக்க வேண்டும். அமைச்சரவையில் உள்ள 15 உறுப்பினர்களில் 8 பேர் ஆதரவு தர வேண்டும். அடுத்ததாக செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரவு தர வேண்டும்.

    இந்த அளவிற்கு குடியரசு கட்சியினர் தனது கட்சி அதிபரை நீக்குவதற்கு முன்வருவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கே சில நாட்கள் ஆகும்.

    அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டால், இனி வரும் காலங்களில் அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் போட்டியிடுவதற்கும் முட்டுக்கட்டை ஏற்படும்.

    பதவி நீக்க முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். இது சம்பந்தமாக டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார்.

    20-ந் தேதி முறைப்படி அதிபர் மாற்றம் நடைபெறும். ஆனாலும் உண்மை என்னை ஒருபோதும் இந்த பதவியில் இருந்து வெளியேற்றாது என்று கூறியுள்ளார். இது சம்பந்தமாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் நேரடியாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    வன்முறை தொடர்பாக ஜோபைடன் வெளியிட்டுள்ள கருத்தில், ‘‘டிரம்ப் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவருடைய ஆதரவாளர்கள் நடந்து கொண்டது தீவிரவாதிகளின் செயல் போல இருந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற கட்டிடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியும் நடந்து வருகிறது. பாராளுமன்றத்தை பாதுகாக்க தவறியதால் சபை பாதுகாப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதே போல அமெரிக்க தலைநகர் போலீஸ் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    கலவரத்தை கண்டித்து பல அதிகாரிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். இதற்கிடையே பாராளுமன்ற செனட் சபையிலும் தற்போது ஜோபைடனின் ஜனநாயக கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் 2 உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவு இப்போது வெளி வந்துள்ளது.

    இரு இடங்களையுமே ஜனநாயக கட்சி கைப்பற்றி இருப்பதால், அந்த கட்சி செனட் சபையில் மெஜாரிட்டி பெற்றுள்ளது.

    ஏற்கனவே பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு மெஜாரிட்டி இருக்கும் நிலையில், செனட் சபையிலும் மெஜாரிட்டி கிடைத்திருப்பதால் எந்த சட்டங்களையும் எளிதாக நிறைவேற்ற முடியும்.
    Next Story
    ×