search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் - டிரம்ப், தலைவர்கள் அனுதாபம்
    X

    குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் - டிரம்ப், தலைவர்கள் அனுதாபம்

    அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் எம்.பி. மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு டிரம்ப், தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். #JohnMcCain #DonaldTrump #BarackObama
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

    அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில், போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது. இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.



    பின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 முறை எம்.பி. பதவி வகித்து உள்ளார்.

    செனட் சபை எம்.பி. என்ற நிலையில் அவர் பழமைவாதியாக திகழ்ந்தார். கருச்சிதைவுக்கு எதிராக குரல் கொடுத்தார். ராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதை ஆதரித்தார். ‘ஒபாமா கேர்’ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக ஓட்டு போட்டார். இது டிரம்புக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டிரம்பை ஜான் மெக்கைன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு மூளையில் புற்றுநோய் தாக்கியது தெரிய வந்தது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்தான், இனி சிகிச்சை பெறுவது இல்லை என்று அவர் முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் அருகில் குடும்பத்தினர் இருந்தனர்.

    அவரது மறைவு குறித்து மனைவி சின்டி மெக்கைன் டுவிட்டரில் துயரத்துடன் வெளியிட்டு உள்ள பதிவில், “என் இதயம் நொறுங்கிவிட்டது. கடந்த 38 ஆண்டுகளாக ஒரு துணிச்சலான, அன்பான மனிதருடன் வாழ்ந்து இருக்கிறேன் என்பதால் நான் அதிர்ஷ்டசாலி. அவர் விரும்பிய வாழ்க்கையை, நேசித்த மனிதர்களை, இடங்களை, கொள்கைகளை கடந்து சென்று இருக்கிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.

    ஜான் மெக்கைன் உடல், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலும், பின்னர் வாஷிங்டன் நகரிலும் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபோலிசில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

    ஜான் மெக்கைன் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

    ஜனாதிபதி டிரம்ப், “ஜான் மெக்கைன் குடும்பத்தினருக்கு எனது மரியாதையையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் இதயங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு இருக்கின்றன” என குறிப்பிட்டு உள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் தனது இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் மிகச்சிறந்த தேசப்பற்றாளர். எனக்கு அவர் மிகச்சிறந்த நண்பர். நான் அவரை இழந்து தவிக்கிறேன்” என கூறி இருக்கிறார்.

    மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா விடுத்து உள்ள இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் சந்தித்த சோதனைகள், நமக்கும் வைக்கப்பட்டு உள்ளது. ஜான் மெக்கைன் காட்டிய தைரியத்தை நாமும் காட்ட வேண்டியது இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறி உள்ளார்.  #JohnMcCain #DonaldTrump #BarackObama
    Next Story
    ×