search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் இறந்ததாக அறிவிப்பது பாவம்: சுஷ்மா சுவராஜ் ஆவேசம்
    X

    ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் இறந்ததாக அறிவிப்பது பாவம்: சுஷ்மா சுவராஜ் ஆவேசம்

    ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் இறந்ததாக அறிவிப்பது பாவம். போதுமான ஆதாரங்கள் இல்லாமல் அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றிய  ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

    அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக ஈராக் ராணுவம் சில மாதங்களாக நடத்திய உச்சகட்ட தாக்குதலின் விளைவாக மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசமாகியுள்ளது.

    இதற்கிடையில், கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளுக்காக வேலை பார்த்து வந்த இந்தியர்கள் 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர். கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? என்ற தகவல் தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் திண்டாடி வருகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து இந்தியாவுக்கு அழைத்துவர உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அவர்களின் குடும்பத்தினர் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்ந்து 12 முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

    மோசூல் நகரம் முழுவதும் இதுவரை தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.

    மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்தது. அங்கு கடத்தப்பட்ட இந்தியர்களை உடனடியாக தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு மீண்டும் கேட்டுக் கொண்டது. இதற்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருப்பதாக ஈராக் அரசும் வாக்குறுதி தந்தது. இதற்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் சமீபத்தில் ஈராக் சென்றார்.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் இப்ராஹிம் அல்-எஷைக்கர் அல்-ஜாப்ரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக சமீபத்தில் இந்தியா வந்துள்ளார்.

    டெல்லியில் மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான்-ஐ  டாக்டர் இப்ராஹிம் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் உள்ளார்களா?, இல்லையா? என்பதற்கு தேவையான போதிய ஆதாரம் தங்கள் நாட்டு அரசிடம் இல்ல என அவர் குறிப்பிட்டார்.

    துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியையும் சந்தித்துப் பேசிய ஈராக் மந்திரியின் இந்த பகீர் தகவல் 39 இந்தியர்களின் குடும்பத்தார்களின் உள்ளங்களில் தீமூட்டும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக கடும் விவாதம் நடைபெற்றது. கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்றத்தில் தவறான தகவல்களை சுஷ்மா சுவராஜ் தெரிவித்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆவேசமாக பதிலளித்த சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-

    பல்வேறு தரப்புகளின் மூலமாக இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நான் பதில் அளித்து வந்துள்ளேன்.

    அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கும்வரை அவர்களை தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். போதிய ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தெரிவிப்பது பாவமாகும். அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்.

    ஒருவேளை அவர்கள் இறந்ததாக அறிவித்து, குடும்பத்தார்களும் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றிய பின்னர் அவர்களில் யாராவது உயிருடன் திரும்பி வந்தால் என்ன செய்வது? அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும்வரை இந்த கோப்புகள் மூடப்படாது.

    கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு துருக்கி அரசையும் நாங்கள் கேட்டிருந்தோம். இந்த விவகாரத்தில் நான் பாராளுமன்றத்தையும் மக்களையும் எந்த வகையிலும் திசை திருப்ப முயன்றதில்லை. அப்படி திசை திருப்புவதால் எனக்கும் அரசுக்கும் எந்தவித ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதூஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் ஈராக் ராணுவம் நடத்திய உச்சகட்டப் போரில் இந்த சிறைச்சாலை தகர்க்கப்பட்டது. அதில் இருந்த கைதிகள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    இந்த சம்பவத்தையும் இன்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி பேசிய சுஷ்மா சுவராஜ், கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் சிறை தகர்ப்பு தாக்குதலில் பலியாகி இருந்தால் அவர்களின் உடல்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்கள் அரசிடம் இல்லை என்று கூறிய ஈராக் மந்திரி அவர்கள் இறந்து விட்டதாக என்னிடம் உறுதிப்பட தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×