search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்
    X

    ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று துவங்க இருக்கும் நிலையில், நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மென்பொருள் அப்டேட் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை டெவலப்பர் நிகழ்வில் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று (ஜூன் 4) துவங்குகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு 2018

    ஆப்பிள் நிறுவனம் இம்முறை அதிக அம்சங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும் பிழை திருத்தங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய அம்சங்களை விட பிழைகளை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் என்எஃப்சி சிப்களை திறக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு ஆப்பிள் பே சேவையை தவிர அக்சஸ் கார்டுகளை போன்று கதவுகளை திறக்க பயன்படுத்த முடியும்.



    ஐஓஎஸ் 12

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில நோட்டிஃபிகேஷன் சென்டரை மாற்றுவதை பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். சமீப காலங்களில் நோட்டிஃபிகேஷன்களை ஐபோன் இயக்கும் விதம் கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ்-இல் நோட்டிஃபிகேஷன் சென்டர் மோசமாக இயங்குவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்துடன் புதிய இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    வாட்ச் ஓஎஸ் 5

    வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ஆக்டிவிட்டி சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் வாட்ச் சாதனத்தை உடல்நலத்தை மேம்படுத்த ஏதுவான சாதனமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை உடற்பயிற்சி சார்ந்த அம்சங்களும், டிராக் செய்ய புதிய வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் அம்சம் வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உறக்கத்தை டிராக் செய்யும் பெடிட் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், புதிய வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மூன்றாம் தரப்பு ஃபேஸ்களை இன்ஸ்டால் செய்யும் வசதி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஓஎஸ் 4.3 தளத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட குறியீட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    மேக் ஓஎஸ் 10.14

    மேக் சாதனங்களில் ஐஓஎஸ் செயலிகள் வேலை செய்வது சார்ந்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அம்சம் 2019 ஆண்டில் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை காட்டிலும், இந்த அம்சம் மேக் ஓஎஸ் தளத்தில் பலரும் விரும்பும் அம்சமாக இருக்கும்.

    ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மேக் ஆப் ஸ்டோரில் அதிகளவு செயலிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறமுடியும்.  மேலும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், கானா, சாவன் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் மேக் ஆப் ஸ்டோரில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் செயலிகளை மேக் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் பட்சத்தில் பாடல்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.


    டிவி ஓஎஸ் 12

    ஆப்பிள் டிவி பெட்டியை இயக்கும் டிவி ஓஎஸ் 12 இயங்குதளம் மற்ற தளங்களுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவாக அப்டேட்களை வழஹ்குகிறது. முந்தைய டிவி ஓஎஸ் தளத்தில் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் புதிய அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்டியலில் முதன்மையானதாக இருப்பது பிக்சர்-இன்-பிக்சர் மோட் எனலாம், இந்த அம்சம் ஒரே சமயத்தில் இரு அளவுகளில் இருவேறு வீடியோக்களை  பிளே செய்யும். ஒரு வீடியோ அளவில் சிறியதாகவும், மற்றொன்று பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும்.

    இதேபோன்று பிரத்யேக ஹோம் ஆப் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. டிவி ஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் நியூஸ் செயலியின் வீடியோ-சென்ட்ரிக் பதிப்பையும் பயனர்கள் நிச்சயம் விரும்புவர். இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் இன்டகிரேஷன், மேம்படுத்தப்பட்ட ரிமோட் ஆப் உள்ளிட்டவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×