என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#Manamadurai கைதி உயிரிழப்பு விவகாரம் - மானாமதுரையில் 4-வது நாளாக தொடரும் சாலை மறியல்
- விசாரணை கைதி உயிரிழப்புக்கு காரணமான மானாமதுரை போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாலையின் நடுவே பந்தல் அமைத்து அங்கேயே தூங்கி எழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் திடீரென உயிரிழந்தார்.
விசாரணை கைதி உயிரிழப்புக்கு காரணமான மானாமதுரை போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ. 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி காலை 10 மணி முதல் மானாமதுரை பஸ் நிலையம் அருகே நான்கு வழிச்சாலையில் ஆகாஷ் டெலிவிசன் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட் டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். சாலை மறியல் காரணமாக மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், அதிகாரிகள் என பல தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
சாலையின் நடுவே பந்தல் அமைத்து அங்கேயே தூங்கி எழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாட்களாக போராட்டம் நடந்த பகுதியில் பள்ளி கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை மட்டும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் நேற்று அவையும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மதுரை ஐகோர்ட்டும் இந்த வழக்கு விசாரணையின்போது மக்களை சிரமப்படுத்தும் வகையில் ஏன் மறியல் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியது.
இதனிடையே ஆகாஷ் டெல்சன் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை எங்களது போராட்டம் நடைபெறும் என தெரிவித்து இன்றும் நான்காவது நாளாக மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த நான்கு நாட்களாக நடந்துவரும் மறியலால் மானாமதுரை பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக மதுரையில் ராமேசுவரம் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்குவதால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






