என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீர் நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்- விஜய்
- நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள்.
- வளர்ச்சி என்கிற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்.
பரந்தூர் திருமண மண்டபத்துக்கு அருகே வேனில் நின்றபடியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நம்முடைய முதல் மாநில மாநாட்டில் நமது கட்சியின் கொள்கைகளை பற்றி எடுத்து சொன்னேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப் பாதுகாப்பு, சூழலியல் மற்றும் கால நிலை நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம். இதுதான் நாம் அறிவித்த அந்த கொள்கை. இதை நான் இங்கே சொல்லக் காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை.
இன்னொரு தீர்மானம் அதே மாநில மாநட்டில் சொன்னேன். அது விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அது மட்டுமில்லாமல் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், நமது விவசாயிகள் பாதிக்கப்படுவ தால் இந்த திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று சொல்லி இருந்தோம். அதை இங்கு உங்கள் முன்னால் மிகவும் வலுவாக வலியுறுத்துகிறேன். இந்த பிரச்சனையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன்.
இன்னொரு முக்கியமான விஷயம். நம்மை ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக் கும் இதை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இங்கே வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.
இதை நான் சொல்லவில்லை என்று என்றால், இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று ஒரு கதையை கட்டி விடுவார்கள். நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று வைங்க.... எல்லாவற்றுக்கும் மேல இன்னைக்கு இந்த பகுதியில் வாழ்கிற எல்லா உயிரினங்களின் இருப்பையும் புவி வெப்பமயமாதல் பய முறுத்திக் கொண்டு இருக்கிறது. அதனுடைய ரிசல்ட்டுதான் ஒவ்வொரு வருடமும் இந்த மழை காலத்தில் வெள்ளத்தில் சென்னை நகரம் எப்படி தத்தளிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
இப்போது சமீபமாக எடுத்த ஒரு அறிவியல் ஆய்வில் இப்படி ஒவ்வொரு வருடமும் சென்னையில் வருகிற வெள்ளத்துக்கு காரணமே இந்த சுற்று வட்டார பகுதிகளில் இருக்கிற சதுப்பு நிலங்களை, நீர் நிலைகளை அழித்ததுதான் என்று சொல்கிறது. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது 90 சதவீத விவசாய நிலங்கள், 90 சதவீத நீர்நிலைகளை அழித்து இங்கு பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வர வேண்டும் என்ற முடிவை எடுக்கிற எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.
இப்போது சமீபத்தில் நமது அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழக அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால் அதே நிலைப்பாட்டைத் தானே இங்கே நமது பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும். எடுக்கணும்.
எப்படி அரிட்டாபட்டி மக்கள் நம்ம மக்களோ அப்படித்தானே பரந்தூர் மக்களும் நம்ம மக்கள். அப்படித்தானே ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே. ஏன் செய்யவில்லை?
ஏனென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒருசில கேள்விகள்...
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டையும் தானே இங்கும் எடுக்க வேண்டும். அது எப்படி நீங்கள் எதிர்க் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இது எனக்கு புரியவில்லையே.
அதனால் இனிமேலும் சொல்கிறேன். உங்கள் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களோட வசதிக்காக அவர்களுடன் நிற்பதும், அவர்களுடன் நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும் அது சரி.... நம்புவது போல் நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி ஆயிற்றே.
அதையும் மீறி நமது விவசாயிகள் உங்களுக்கு எதிராக போராடினால் பிரச்சனைதான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
உங்களுடைய இந்த விமான நிலையத்துக்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களை முன்னேற்றும். ஆனால் வளர்ச்சி என்கிற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்.
இவ்வாறு விஜய் பேசினார்.






