என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாட்கள் எண்ணப்படுவதை தி.மு.க. அரசு உணர்ந்துள்ளது- வானதி சீனிவாசன்
- எமர்ஜென்சி காலத்திற்கு திரும்பவும் மக்களை தி.மு.க. அரசு எடுத்துக்கொண்டு செல்கிறது.
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று கவர்னர் சொல்லவில்லை.
சென்னையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆளுநரை அவமானப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. அதுமட்டுமல்ல எப்படியாவது அவரை அச்சுறுத்தி அவருடைய செயல்பாடுகளில் இருந்து பின்வாங்க வைக்க வேண்டும் என மறைமுகமாக ஒரு அழுத்தத்திற்காக இந்த மாதிரி வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த on twitst practice என்பது தி.மு.க.விற்கு புதிதல்ல.
கருத்து சுதந்திரம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கான மரியாதை என்பதில் எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லாத தி.மு.க. அரசு இப்படி தான் நடந்துகொள்ளும்.
இங்கு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட அது கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் கூட சமீப காலங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது.
சட்டசபைக்குள் உறுப்பினர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அல்லது அவர்கள் காட்டுகின்ற எதிர்ப்பை கூட லைவ்வை கட் செய்கிறார்கள். மீடியாக்கள் போடக்கூடாது என்று சொல்கிறார்கள்.
எமர்ஜென்சி காலத்திற்கு திரும்பவும் மக்களை தி.மு.க. அரசு எடுத்துக்கொண்டு செல்கிறது.
போஸ்டர், ஆர்ப்பாட்டம் எல்லாம் கவர்னருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. இவர்கள் தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான நடத்துகிற போராட்டமாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
மரியாதைக்குரிய கவர்னரை வரவழைத்து, அவர் என்ன கேட்டார். தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொன்னார்.
தேசிய கீதம் தமிழக சட்டசபைக்கு மட்டும் அவர் கேட்டாரா? தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற மற்ற மாநிலத்தில் பா.ஜ.க. அல்லாத அரசாங்கங்கள் இருக்கிறது.
கவர்னர் வருகை தரும்போதும், அவர் நிகழ்ச்சி முடிந்து செல்லும் போதும் தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது மரபு. அதனால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார். இதை ஏன் மறுக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று கவர்னர் சொல்லவில்லை. அதையும் பாடுவோம். ஆனால் தேசிய கீதத்தை பாடுவதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு தூரம் எரிச்சல் வருகிறது என்று தெரியவில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு என்பது முதன்முதலில் தி.மு.க. அரசு வரும்போது கூட இங்கு கொண்டுவரவில்லை. அதற்கு பின்னால் இருந்து தான் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகிறது. பெருமை கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடணும். தேசிய கீதமும் பாடணும் இதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது.
ஆனால் கவர்னரை அவமானப்படுத்த வேண்டும். கவர்னர் சொன்னால் நாம ஏன் கேட்கணும் அப்படி நினைக்கிற தி.மு.க. அரசு இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறது.
அண்ணா பல்கலை. பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சூழல், இந்த அரசு இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்குகின்ற அரசாக இருப்பது இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி பேசுவதற்காக சட்டசபையில் கூடுகிறபோது, அந்த கவனத்தை எல்லாம் திசை திருப்பவே கவர்னருடன் மோதல் போக்கை கையாண்டு, அதை மட்டுமே மக்களை பேச வைக்கிறார்கள்.
மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே வேண்டுமென்றே தி.மு.க. அரசு சட்டசபை நிகழ்வுகளை சாக்காக வைத்துக்கொண்டு செய்கின்ற முயற்சியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
தொழில்நுட்ப கோளாறை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் சட்டசபையில் பேசினால் கூட முழுமையாக வராது. அதை அவர்கள் கட் செய்து, வெட்டி ஒட்டி வெளியே வரும்.
நேற்று உங்களுக்கு லைவ் கொடுக்கவில்லை. கேட்டால் தொழில்நுட்பக்கோளாறு. எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும்போது எல்லாம் தொழில்நுட்பக்கோளாறு வந்துவிடும்.
திராவிட மாடல் அரசில் நன்றி சொல்லி பாராட்டினால் அனுமதிப்போம். எதிராக பேசினால் தொழில்நுட்பக்கோளாறு வந்துவிடும். உடனே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வந்துவிடும்.
நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என்பதை தி.மு.க. அரசு உணர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பிரச்சனைகளை யார் பேசினாலும் பதட்டம் அடைகிறார்கள்.
மாணவி கருப்பு துப்பட்டா போட்டால் கூட அரசாங்கம் பயப்படுகிறது. அவர்களுக்கு தெரிகிறது தமிழக மக்கள் எந்த அளவிற்கு அவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.






