என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

UPSC தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!
- இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வருடந்தோறும் தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.
அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும்
தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.






