என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு: கரூர் செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
- பிரசார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட ரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
பிரசார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் செல்கிறார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூற உள்ளார்.






