என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வின் கூட்டணி கோரிக்கையை நிராகரித்தது த.வெ.க.
- அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்த போது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என இபிஎஸ் பேசினார்.
- சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விஜய் மன்னிப்பு கோரினார்.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விஜய் மன்னிப்பு கோரினார்.
இதனையடுத்து மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அக்கட்சியின் தவைர் விஜய் புதியதாக நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணி கோரிக்கையை தவெக நிராகரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமாரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "விஜய்யின் பிரசார பயணம் தொடரும். அனுமதிக்காக காத்திருக்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம். விஜய்யின் ஆறுதல் சந்திப்பு தனிப்பட்டது. அரசியலாக்க விரும்பவில்லை" என்று கூறினார்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்த போது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என இபிஎஸ் பேசிய நிலையில், பல அதிமுக அமைச்சர்கள் விஜயை அதிமுக கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை தவெக நிராகரித்துள்ளது.






