என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. சின்னம் மோதிரமா? விசிலா? - சேலம் மக்கள் சந்திப்பில் விஜய் அறிவிக்க வாய்ப்பு
    X

    த.வெ.க. சின்னம் மோதிரமா? விசிலா? - சேலம் மக்கள் சந்திப்பில் விஜய் அறிவிக்க வாய்ப்பு

    • தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையான கட்டமைப்பை தற்போது த.வெ.க. உருவாகி வருகிறது.
    • ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் விஜய் மக்கள் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.

    தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

    எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாக 128 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை த.வெ.க. அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதேபோல், வார்டு பகுதி செயலாளர்களையும் நியமித்துள்ளது.

    மாவட்டச்செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்ட தொகுதிகளில் அவர்கள் மின்னல் வேகத்தில் பணிகளை முன்னெடுத்து உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையான கட்டமைப்பை தற்போது த.வெ.க. உருவாகி வருகிறது.

    இந்தநிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் கடந்த நவம்பர் இறுதியில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்காக விசில், மோதிரம், மைக், உலக உருண்டை உள்ளிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு அனுப்பியது. இதில், த.வெ.க.வுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்தல் சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த சின்னம் மோதிரமா?, விசிலா? அல்லது வேறு சின்னமா? என்பது இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.

    ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் விஜய் மக்கள் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க.வுக்கான சின்னத்தை விஜய் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து த.வெ.க.வினர் கூறும்போது, 'மக்கள் சந்திப்பில் சின்னம் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எங்கள் தலைவர் எப்போதும் மக்களுடனே இருக்கிறார். எனவே சின்னமும் மக்கள் சந்திப்பிலே அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×