என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது - கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு
- முதல் முறையாக த.வெ.க தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.
த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது.
நுழைவு வாயிலில் காலை 9 மணியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அழைப்பு கடிதம், கார் பாஸ் மற்றும் கட்சி அடையாள அட்டை, காண்பித்து முதல் கட்ட சோதனையாக, பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு சென்றனர்.
பின்னர் அடையாள அட்டையில் உள்ளவர் பெயரை உறுதி செய்ய 2-ம் கட்ட சோதனையாக ஆதார் போன்ற அரசு அடையாள அட்டைகளை காண்பிக்க கூறி வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
3-ம் கட்ட இறுதி சோதனையாக அவர்களது தொகுதி, மாவட்டம், பொறுப்பு உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கி பின்னர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் பொதுக்குழுக் கூட்ட அரங்கத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த த.வெ.க. உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பொதுக்குழு கூட்டம் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்கள் தளபதி விஜயின் உரையைக் கேட்போம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். 2026 தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
முதல் முறையாக த.வெ.க தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டசபை தேர்தல்களுக்கான கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.






