என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் பிரமாண்ட மாநில மாநாடு: விஜய் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்
    X

    மதுரையில் பிரமாண்ட மாநில மாநாடு: விஜய் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்

    • மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட இருக்கின்றனர்.

    மதுரை:

    த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை (வியாழக்கிழமை) மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    தொண்டர்கள் சந்திப்பு முடிந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்குகிறது. நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றுகிறார். அடுத்ததாக மேடையில் நின்றபடி கட்சி கொடியை 'ரிமோட்' மூலம் விஜய் ஏற்றுகிறார். தொடர்ந்து கொள்கை தலைவர்கள் படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அடுத்ததாக உறுதிமொழி எடுக்கப்பட்டு கட்சி கொள்கை பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது.

    இதை தொடர்ந்து மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. நிறைவாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்புரையில் முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார். விஜய் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது.

    மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று காலையில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர். மாநாடு பந்தலில் அதிகாலை நடந்த சிறப்பு யாகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொண்டார்.

    மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக த.வெ.க. மாநாடு அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றத்தில் அண்ணா, எம்.ஜி.ஆருடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் 'வரலாறு திரும்புகிறது' என்ற வாசகத்துடன் கட்அவுட் வைக்கப்பட்டு உள்ளது. மேடையின் அருகே கொள்கை தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

    குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொண்டர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. மாநாட்டுக்கு வரும் ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு லிட்டர் காலி பாட்டில் வழங்கப்பட்டு குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடித்துக் கொள்ளும் வகையில் 10 லட்சம் பாட்டில்கள் கொடுக்கப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மீறி வரும் பெண்களுக்கு முன்னேற்பாடாக பிங்க் அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டு திடலில் 400 மருத்துவ குழுக்கள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக தயார் நிலையில் மாநாட்டு பந்தலை சுற்றி இருப்பார்கள். கூட்டத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால் டிரோன் மூலம் அவசர மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இது மட்டுமின்றி தொண்டர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் 50 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது.

    கூட்டத்தில் நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புக்கு கட்சி சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய சீருடையணிந்த தன்னார்வலர்கள் ஈடுபட இருக்கின்றனர்.

    மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டு பாதுகாப்பு பணியில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட இருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரை மாநாட்டுக்கு 3 மடங்கு கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதுரை த.வெ.க. மாநில மாநாடு தமிழக அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×