என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு - தென் மாவட்டத்தில் பலத்தை நிரூபிக்க திட்டம்
    X

    மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு - தென் மாவட்டத்தில் பலத்தை நிரூபிக்க திட்டம்

    • அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. ஆயுத்தமாகி வருகிறது.
    • மதுரை மாநாட்டில் செப்டம்பர் மாத தனது சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். இது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கட்சி கட்டமைப்பு பணிகளில் விஜய் தீவிரமாக இறங்கினார்.

    நகரம் தொடங்கி கிராமம் வரை கட்சிக்கு அனைத்து நிலை நிர்வாகிகளையும் த.வெ.க. நியமித்து முடித்துள்ளது. வார்டு, பகுதிகளுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. ஆயுத்தமாகி வருகிறது.

    வடமாவட்டங்களில் கட்சிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தென்மாவட்ட பகுதியில் த.வெ.க. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அங்கு கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு மாத இறுதியில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் இடம் தேர்வு பணி நடந்து வந்தது.

    இதற்காக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, மதுரையில் மாநாடு நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான இடம் தேர்வுக்காக நிர்வாகிகள் நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    மதுரை மாநாட்டில் செப்டம்பர் மாத தனது சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். முக்கிய பிரமுகர்களும் இந்த மாநாட்டில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என ஆதரவு தெரிவித்து அக்கட்சியினர் அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டி வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாநாட்டை த.வெ.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    Next Story
    ×