என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

    • மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
    • மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.


    Live Updates

    • 21 Aug 2025 2:03 PM IST

      மாநாடு நடைபெறும் இடத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதால் தொண்டர்கள், ரசிகர்கள் தளர்ந்து காணப்படுகின்றனர்.

    • 21 Aug 2025 1:33 PM IST

      த.வெ.க. மாநாட்டில் 178 பேர் வரை மயக்கம், தலைசுற்றல் காரணமாக முதலுதவி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 21 Aug 2025 1:03 PM IST

      முன்கூட்டியே தொடங்குகிறது த.வெ.க. மாநாடு?

      த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் அவதியுறும் நிலையில், தற்போதே நிர்வாகிகள் மாநாட்டு மேடையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். சற்று நேரத்தில் விஜய் மாநாட்டு மேடைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • 21 Aug 2025 11:33 AM IST

      த.வெ.க. மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 21 Aug 2025 11:22 AM IST

      மதுரை மாநாட்டிற்கு செல்ல பட்டாசு வெடித்த போது த.வெ.க தொண்டர் காயம்

      தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பகுதியில் இருந்து இளைஞர்கள் கூட்டமாக பஸ்சில் பயணித்தனர்.

      அவர்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் உணவருந்த பஸ்சை நிறுத்தினர். பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அங்கு ஆர்வம் மிகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தனர்.

      அப்போது ஒருவர் பட்டாசை பற்ற வைத்தார். அதனை ஓடந்துறையை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் அந்த வெடியை கையில் மேலே தூக்கி வீசி விளையாடியதாக தெரிகிறது.

      அந்த சமயம் கையில் வைத்திருந்த வெடி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் சங்கருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார்.

      பின்னர் அவரை நண்பர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 21 Aug 2025 11:08 AM IST

      தவெக மாநாடு - ராம்ப் வாக் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி தீவிரம்

      தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் விஜய் ராம்ப் வாக் செல்லும் பகுதி தடுப்புகளில் கிரீஸ் தடவப்படுகின்றன. விஜய் ராம்ப் வாக் செல்லும் போது தடுப்புகளில் ஏறி த ரசிகர்கள் அத்துமீறுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • 21 Aug 2025 11:05 AM IST

      த.வெ.க. மாநாட்டு திடலில் வெயில் காரணமாக தொண்டர்கள் சிலர் மயக்கம்

    • 21 Aug 2025 11:05 AM IST

      மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 21 Aug 2025 11:01 AM IST

      மாநாடு நடைபெறும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை

      த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் மதுரையை அடுத்த பாரபத்தி பகுதி திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும். அந்த பகுதியில் திரண்ட தொண்டர்கள் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மாற்றத்தால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எலியார்பத்தி, வளையங்குளம், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • 21 Aug 2025 11:01 AM IST

      விஜய் படம் பொறித்த டி-சர்ட் அணிந்து மதுரை மாநகரில் உலா வந்த த.வெ.க. தொண்டர்கள்

      த.வெ.க. மாநாட்டிற்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் தொண்டர்கள் அனைவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில், விஜய் படம் பொறித்த டி-சர்ட்டுகளை அணிந்திருந்தனர். இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம் அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×