என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இடைக்கால பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
    X

    இடைக்கால பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

    • தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
    • விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    * 4,226 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான விளையாட்டுக் கருவிகளைத் தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை வழங்கி உள்ளது.

    * தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.

    * கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 101 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    * மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா-இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நாடே வியக்கும் வண்ணம் கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் இளையோருக்கான உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடத்தப்பட்டதைப் பாராட்டும் விதமாக, இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் விளையாட்டு விருதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் வென்றெடுத்துள்ளது.

    * விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×