இடைக்கால பட்ஜெட்: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப்‌ பட்டாக்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.
இடைக்கால பட்ஜெட்: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு
Published on

சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22-ம் நிதி ஆண்டில் 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 623 நபர்களுக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகள் மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இதுவரை 77 ஆயிரத்து 800 இணைய வழி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், சென்னை மற்றும் அதன் கூழ் பகுதிகளில் 15 ஆயிரத்து 393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62 ஆயிரத்து 407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.

* நவீன மின்னணு நில அளவைக் கருவிகளைப் பயன்படுத்தி நிகழ்நேர இயக்கவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மறு நில அளவைப் பணி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com