என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கறிக்கோழி வளர்ப்போர் போராட்டம்: முத்தரப்பு பேச்சுவார்த்தையை ரத்துசெய்த அரசு
    X

    கறிக்கோழி வளர்ப்போர் போராட்டம்: முத்தரப்பு பேச்சுவார்த்தையை ரத்துசெய்த அரசு

    • கறிக்கோழி வளர்ப்போர் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

    இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நாளை) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை-கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோழி வளர்ப்புக் கூலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு சாத்தியக்கூறு இல்லை என கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பில், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் வர்த்தக ரீதியிலான ஒப்பந்த விவசாய முறையில் (Contract farming on Commercial basis) கோழிப்பண்ணைகள் நடத்துகின்றனர். அவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் இருதரப்பினரும் பரஸ்பர உடன்பாட்டுடன் விலை, அளவு, தரம், நேரம் தொடர்பாக கையெழுத்திடுகின்றனர்.

    இந்த ஒப்பந்தங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறையின் பார்வையின் கீழ் வருவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் ஒத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஏதும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எனவே இதுதொடர்பாக எழும் பிரச்சனைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியிலான தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் என்பதால், இந்திய ஒப்பந்ததாரர்கள் சட்டம் 1872- ன் (Indian Contracts act,

    1872) படி சட்ட நடவடிக்கைகளின் மூலமே தீர்வு காண முடியும்.

    இக்காரணங்களால் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தனிநபர்/குழுக்களிடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பான இப்பிரச்சனையை உரிய சட்ட அமைப்பினை நாடி சட்டத்தீர்வு காணும்படி தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோழி வளர்ப்பவர்களின் தொடர் போராட்டத்தால், சந்தையில் கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடக்க சாத்தியக்கூறு இல்லாத நிலையில் கறிக்கோழி விலை கிலோ ரூ.400-ஐ எட்டும் அபாயம் இருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

    முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தான பிறகும் போராட்டத்தை தொடர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×