என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரோடு ஷோக்களுக்கான விதிமுறைகளை 10 நாட்களில் அரசு சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்
- தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
- ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி பலியாகினர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை போலீசார் விதிப்பதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு, தனி நீதிபதி முன்பு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து அரசு, கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறது என்றார்.
அப்படி என்றால் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்ற முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருக்காதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. அரசியல் கட்சிகளையும் தடுக்கவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்று ஐகோர்ட்டில் ஏற்கனவே அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், "அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி 10 நாட்களுக்குள் அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரம் தற்போது பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரி ஏதாவது விண்ணப்பம் செய்திருந்தால் அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க இந்த உத்தரவு அரசுக்கு தடையாக இருக்காது. இந்த வழக்கு விசாரணையை வருகிற அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று கூறினார்கள்.






