என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் ரகுபதி இலாகா மாற்றம் - துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பு
- அமைச்சர் ரகுபதி கனிமவளத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சர்கள் 2 பேர் இலாகாக்களை திடீரென மாற்றி அமைத்து உள்ளார்.
அதன்படி அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை மாற்றப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையுடன் சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார். அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை (இயற்கை வளத்துறை) அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டது.
கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைத்த போது பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோரை எடுத்து விட்டு உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி செழியனை நியமித்தார். செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை மின்வாரியத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடமும், மதுவிலக்கு ஆயத் தீர்வை இலாகாவை அமைச்சர் முத்துசாமியிடம் பிரித்து கொடுத்து இருந்தார். இப்போது மீண்டும் ரகுபதியிடம் இருந்த இலாகாவை மாற்றி அமைத்து உள்ளார்.
தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






