என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிரம்ப் விதித்த 50 சதவீத வரியால் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.700 கோடி இழப்பு
- இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
- ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
திருப்பூர்:
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதி க்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இருந்தே நடக்கிறது. 1980 முதல் 90ம் ஆண்டுகளில் இங்கு வளர்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி என்ற அளவில் ஏற்றுமதி நடக்கிறது.
இந்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரி க்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஏற்றுமதியை நம்பி சிலநூறு பெரிய பின்னலாடை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க செய்துள்ளது.
இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு 25 சதவீத வரி ஒரு மாதமாக இருந்து வந்த நிலையில், இன்று (27-ந்தேதி) முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னதாக பெறப்பட்ட பின்னலாடை ஏற்றுமதிக்கான ஆடைகளை பழைய விலையில் பெற்று விற்பது என்பது அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு இயலாத விஷயமாகி விட்டது.
அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பின்னலாடை ஒன்றை 10 டாலருக்கு விற்ற ஒரு இறக்குமதியாளர், டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக இன்று முதல் அதை 16 முதல் 18 டாலர் மதிப்பில் தான் விற்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது போல, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
50 வரி விதிப்பு மூலம் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தினசரி ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும்.மேலும் அமெரிக்காவின் 50 சதவீத அதீத வரி திருப்பூர் பின்னலாடைத்தொழிலை நேரடியாக பாதிப்புக்கு ஆளாக்கும் என்பது உண்மை. சில நிறுவனங்கள் நேரடியாகவும், சில நிறுவனங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பாதி உற்பத்தியில் இருக்கக்கூடிய ஆடைகள் நிலை குறித்து இறக்குமதி வர்த்தகர்களிடம் பேசி வருகிறோம்.
இரு தரப்பும் இந்த வரிவிதிப்பால் ஏற்படும் இழப்பை பரஸ்பரம் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று பேசி வருகிறோம். இந்த நிலை நீடித்தால் மாதத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், அமெரிக்கா நம் மீது விதித்துள்ள வரியால் போட்டி நாடுகளுக்கு சாதகமாக அமையும். ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
புதிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்வது, அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற விஷயங்கள் நடைபெற வேண்டும். அரசு சலுகைகளும் வழங்க வேண்டும். அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம், மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. திருப்பூர் பின்னலாடை துறையில் உள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை முன்வைத்து நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதனிடையே அமெரிக்காவால் ஏற்பட்ட பாதிப்பை சரி கட்ட ஐரோப்பா, அரபுநாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடைகளை அதிக அளவு உற்பத்தி செய்து கொடுக்க திருப்பூர் உற்பத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






