என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடன் தொல்லையால் விபரீத முடிவு: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஜவுளிக்கடை அதிபர், மனைவி தற்கொலை
- ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
திருச்சி:
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி விக்டோரியா (35) ரெயில்வே ஊழியர். இந்த தம்பதியருக்கு ஆராதனா( 9), ஆலியா( 3) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
அலெக்ஸ் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கீழ கற்கண்டார் கோட்டை மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. புதிய வீடு கட்ட வாங்கிய கடனுக்கான தவணை தொகையை அலெக்சின் மாமியார் தனது பென்சன் தொகை மூலமாக செலுத்தி வந்தார்.
சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் பென்சன் நின்றுபோனது.
இதற்கிடையே அலெக்ஸ் தஞ்சையில் உள்ள தனது சகோதரர் ஒருவருக்கு கடனுக்கு ஜாமின் கொடுத்து, அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அலெக்சின் தயார் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு செலவழிக்க நேரிட்டது.
இதற்கிடையே ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜவுளிக்கடையை மூடியுள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்தாலும் கடன்காரர்கள் மனைவி, குழந்தைகளை தொந்தரவு செய்வார்களே என கருதிய அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகள் ஆராதனா, ஆலியா ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் குழந்தைகளின் அதே அறையில் அலெக்ஸ் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பக்கத்து அறையில் விக்டோரியா தூக்குப்போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இன்று காலை வழக்கம் போல் கடன்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எந்த சப்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.