என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களை குளிர்வித்த கோடை மழை
- களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
- சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.
நெல்லை மாநகரில் டவுன், பாளையங்கோட்டை, சமாதானபுரம், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் கனமழை கொட்டியது. இரவிலும் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாளை சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
மாவட்டத்திலும் களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வள்ளியூரில் யாதவர் தெருவில் மழை பெய்தபோது அங்குள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், அந்தநேரம் அவ்வழியாக சென்ற மாடு ஒன்று அதில் உரசியதால் மின்சாரம பாய்ந்து மாடு உயிரிழந்தது.
சில இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ராதாபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குளம்போல் தேங்கி கிடந்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 8 சென்டிமீட்டரும், ராதாபுரத்தில் 6 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் மாலையில் இதமான காற்று வீசிய நிலையில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழை மக்களை குளிர்வித்துள்ளது.
அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 99.54 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து எஸ்டேட்டில் 16 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 12 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி சுற்றுவட்டாரங்களில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் சாரல் மழை பெய்தது.
ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் மாலையில் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 63 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 53 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 26 மில்லிமீட்டரும், கடனா அணையில் 12 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குற்றாலம் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.
தென்காசி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






