என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அசிங்கப்படும்போது மடைமாற்றக் கதை: மத்திய அரசு நோக்கி கேள்விகளை எழுப்பிய முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி
- ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
- முன்னாள் சாராய அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Washing Machine பற்றி முதலமைச்சர் பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல் புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்.
எப்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திமுக அசிங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடியைப் போல, ஹிந்தி எதிர்ப்பு அல்லது, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற பெட்டியைத் திறப்பது வழக்கம். அறுபது ஆண்டுகளாக, அவரது தந்தை காலத்தில் தொடங்கி, அவரது பேரன் காலத்திலும், அதே நாடகத்தை அரங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா?
குழப்பத்தில் இருக்கும் முதலமைச்சருக்கு, சில விளக்கங்கள்.
ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிலும், முன்னாள் சாராய அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Washing Machine பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.
மாநில அனைத்துச் சட்டங்களும், திட்டங்களும், அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளிலேயே மொழிபெயர்த்து அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களைப் புறக்கணித்து விட்டு, உங்கள் தந்தையின் பெயரையும், சிலையையும் வைப்பதை விடவா ஆணவம் வந்துவிடப் போகிறது?
தாய்மொழி தமிழை, பிழையின்றிப் பேச, எழுதத் தெரியாதவர்களை அமைச்சர்களாக வைத்துக் கொண்டு, ஐம்பது ஆண்டு காலமாக, யுனெஸ்கோ விருது உள்ளிட்ட போலி வரலாறுகளை உருவாக்கி, நமது மாணவர்களை மட்டுப்படுத்தியதை விட தரம் தாழ முடியாது என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?
நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை ஆளுநர்களாகக் கேட்டுப் பெற்று, ஆடிய ஆட்டத்திற்குத்தான் பத்து ஆண்டுகள் ஆட்சியைப் பறிகொடுத்து, அதே ஆளுநர் மாளிகையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு நின்ற வரலாற்றை தமிழக மக்கள் அறிவார்கள்.
உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க, அது டாஸ்மாக்கைக் கையாளும் அமைச்சரவை இல்லை.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்ததை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்துவிட்டாரா? போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால், முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்?.
இரும்பின் தொன்மை குறித்த ஆய்வு, கீழடி ஆய்வறிக்கை இவை எல்லாம், உலக அரங்கில் செல்லும்போது நமது இந்திய நாட்டின் வரலாறாகவே பார்க்கப்படும். உலகின் பல நாடுகளும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும்போது, நாமும் அதற்கேற்ப கூடுதல் ஆய்வுகளும், தகவல்களும் வழங்க வேண்டும். அவற்றைக் கேட்டால், திமுக அரசு தர மறுப்பது ஏன்?
நீதிமன்றத்தில், ஒன்றல்ல இரண்டல்ல. நான்கு வழக்குகளில் ஒரே நாளில் குட்டு வாங்கிய திமுக அரசு, அதை மடைமாற்ற வேறு வழியின்றி தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசை மீண்டும் அனுப்பியிருக்கிறது. இதே கேள்விகளை, திமுக அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள். மாற்றி மாற்றி வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு தளங்களில் கேட்பதும், ஒவ்வொரு முறையும் நாம் அவர்களுக்குப் பொறுமையாக அதே பதிலை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.






