என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்: செங்கோட்டையன்
    X

    2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்: செங்கோட்டையன்

    • அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு.
    • அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    கோபி:

    அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இன்னும் 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து ஒருங்கிணைக்கும் பணியை நாங்களே மேற்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் தெரிவித்த கருத்து விவாத பொருளாக மாறியது. இதையடுத்து மறுநாளே செங்கோட்டையன் வசித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன் அவசர அவசரமாக கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அ.தி.மு.க ஒன்றிணைவது குறித்து பேசினார். இந்த விவரம் அ.தி.மு.க.வில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் செங்கோட்டையன் கலந்து கொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று அண்ணா பிறந்தநாளில் அவரது தியாகத்தை போற்றி மகிழ்வோம். அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டி காத்தார்.

    என்னை பொருத்தவரை எம்.ஜி.ஆர். கனவு, ஜெயலலிதா கனவை நினைவாக்கும் வகையில் மீண்டும் 100 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க அமர வேண்டும் என்ற நோக்கில் கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசினேன்.

    என்னைப் பொருத்தவரை அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதை எனது நோக்கம்.

    எனது கருத்துக்கு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் இடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள், பொதுமக்கள் கருத்தைதான் பிரதிபலித்தேன். இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2026 -ல் அ.தி.மு.க ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து 10 நாள் கெடு விவகாரம், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த விவகாரம் என பல்வேறு கேள்விகளை நிருபர்கள் செங்கோட்டையனிடம் அடுக்கடுக்காக கேட்டனர். ஆனால் அனைத்து கேள்விக்கும் அவர் பதில் சொல்லாமல் சிரித்தவாறு சென்று விட்டார்.

    Next Story
    ×