என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று நடந்த திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்த செங்கோட்டையன்
    X

    சென்னையில் இன்று நடந்த திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்த செங்கோட்டையன்

    • நாளடைவில் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார்.
    • எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையிலேயே காரில் அமர்ந்திருந்தாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் மூலம் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கான சூழல் ஏற்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை. நாளடைவில் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார்.

    இந்த நிலையில் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை என்றும் 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று தான் கூறியிருந்தேன் என கூறி பின்வாங்கி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை 10 நாளில் தொடங்கி 1½ மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்றும் விளக்கம் அளித்துள்ள செங்கோட்டையனிடம் ராணுவ கோப்புடன் இருந்த கட்சி இப்படி உள்ளதே என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக பதில் அளிக்காத செங்கோட்டையன் அது உங்கள் கருத்து என்று கூறிவிட்டு சென்னையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் இல்ல திருமண விழாவில் அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில் அதில் கலந்து கொள்ளவே செங்கோட்டையனும் சென்றார்.

    சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே வந்து மணமக்களை வாழ்த்தினார். அவர் திருமண மண்டபத்தின் உள்ளே இருந்ததால் செங்கோட்டையன் மண்டபத்துக்குள் உடனே செல்லாமல் நீண்ட நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையிலேயே காரில் அமர்ந்திருந்தாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. இணைப்பு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று அவர் கூறியிருந்த நிலையில், செங்கோட்டையன் மீண்டும் நழுவி பின்வாங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×