என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் நடத்தும் 'ஜன நாயகன்' பொங்கலில் கூட்டணி பற்றி பேசினால் நடவடிக்கை - செல்வப்பெருந்தகை
- கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
- இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடம், முடிவெடுக்கட்டும். பொது வெளியில் எதையும் பேச வேண்டாம் என்று ஒரு தரப்பு பேசி வருகிறது.
காங்கிரசுக்குள் இப்படி 2 பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஜனநாயகன் பொங்கல்' என்ற பெயரில் காங்கிரசில் ஒரு பிரிவினர் இன்று மாலை கோயம்பேட்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்த கோரிக்கையை விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வர வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது. இது காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனியாக இவ்வாறு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோயம்பேட்டில் இன்று நடக்கும் நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதில் கூட்டணி விவகாரங்கள் பற்றி பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக தொண்டர்களின் கருத்துக்கள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பேசுவது கூட்டணிக்குத்தான் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
இந்த குழுவினர் தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஏற்கனவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.
கடலூர் மாநாட்டில் விஜயபிரபாகரன், விஜய்க்கு ஒரு ஆலோசனை சொல்வதாக சொல்லி காங்கிரஸ் பற்றி பேசியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் கொல்லை புறமாக செயல்படாது. இதைப்புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், ராம் மோகன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






