என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மக்கள் அச்சப்பட தேவை இல்லை
    X

    சென்னையில் இன்று 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மக்கள் அச்சப்பட தேவை இல்லை

    • தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
    • மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும்.

    சென்னை:

    பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆகியவற்றைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    இதைத் தொடா்ந்து துறைமுகத்தின் கடல் பகுதியில் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் கடலோரக் காவல் படையின் 2 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே வந்தடைந்தன. வான்வழித் தாக்குதலின்போது, கொள்கலன் மீது தீப்பற்றியது.

    அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதர குழுவினா் பொது மக்கள், ஊழியா்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், காணாமல் போனவா்களை அடையாளம் கண்டறியவும், காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, மணலியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (சி.பி.சி.எல்.) மற்றும் காமராஜா் துறைமுகம், எண்ணூா் ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரகால சூழலையும் எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒத்திகை பயிற்சியில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊா்க்காவல் படையினா், சென்னை பெருநகர காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்புப் படையினா், தன்னார்வலா்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

    இந்தப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபாா்த்துக்கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ அடைய தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×