என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி? - ஆதரவாளர்களுடன் சசிகலா இன்று அவசர ஆலோசனை
    X

    சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி? - ஆதரவாளர்களுடன் சசிகலா இன்று அவசர ஆலோசனை

    • போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
    • தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை கட்சியை விட்டு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நீக்கினார். சசிகலாவை சந்தித்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகியை நீக்கும் அளவுக்கு சசிகலா - தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமியை மிக தீவிரமாக எதிர்த்து வந்த டி.டி.வி. தினகரன், தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார். தீவிர அரசியலில் சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா, தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் சசிகலா இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

    தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஆதரவாளர்கள் அனைவரும் தனது இல்லத்திற்கு வருமாறு சசிகலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வரும் சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களை குறிவைத்து சசிகலா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறீர்களா? என ஆதரவாளர்களிடம் சசிகலா கேட்டு வருவதாகவும், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை சசிகலா தரப்பு ஏற்கவில்லை என தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×