என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் ரவுடி என்கவுண்ட்டர் - காவல் ஆணையர் விளக்கம்
- காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார்.
மதுரை:
மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 40). இவர் மதுரை மாநகர தி.மு.க பிரமுகரும், முன்னாள் மண்டல தலைவருமான வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். காளீஸ்வரன் தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரில் 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை வீட்டு வெளியே சென்ற போது காளீஸ்வரனை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), மதுரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அசேன் (32), சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் கார்த்திக் (28), மதுரை காமராஜர்புரம் நவீன்குமார் (22), ஜெயக்கொடி (65), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 18 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பாலகிருஷ்ணன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வி.கே.குருசாமி மற்றும் வெள்ளை காளி தரப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் இரு தரப்பினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் 3 நாட்களுக்கு முன்பாக மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 கிலோ கஞ்சாவுடன் நின்ற ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர்தான், கஞ்சா விற்பனை செய்ய சொன்னதாக தகவல் தெரியவந்தது. மேலும் அவர் காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
அவரை தனிப்படை போலீசார் தேடிய நிலையில் விளாச்சேரி பகுதியில் நேற்று இரவு 7 மணிக்கு சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார். போலீசாரும் அவரை காரில் விரட்டிச் சென்றனர். மேலும் அந்த பகுதிகளில் இருந்த சோதனைச்சாவடிகளில் இருந்த போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஒரு சோதனைச்சாவடியில் சுபாஷ் சந்திரபோசின் காரை போலீசார் மடக்கியபோது அவர்களிடம் இருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து ரிங்ரோடு கல்லம்பல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அவரது காரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே காரில் இருந்து தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சரண் அடையுமாறு கூறினர்.
ஆனால் அவர் தன்னிடமிருந்த பெரிய கத்தியை எடுத்து போலீசாரை தாக்கினார். அதில் போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனது துப்பாக்கியை காட்டி சுபாஷ் சந்திர போசை சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டார். அதில் அந்த குண்டு கார் மீது பட்டது.
எனவே தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் பூமிநாதன் திருப்பிச் சுட்டபோது மார்பில் குண்டு பாய்ந்து சுபாஷ்சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுரையில் வி.கே.குருசாமி, வெள்ளை காளி தரப்பினரிடையே நடைபெற்று வரும் 22 ஆண்டு கால பகை காரணமாக 21 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் வெள்ளைக்காளி தரப்பில் 3 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மதுரை காவல் ஆணையர் கூறுகையில்,
ரவுடி சுபாஷ் சந்திர போஸ், போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதால், தற்காப்புக்காக என்கவுண்ட்டர் நடந்தது. காலில் சுட முயன்றபோது, குனிந்ததால் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என்று விளக்கம் அளித்தார்.






