என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
- அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது.
- பா.ஜ.க. அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இப்போதே தேர்தல் பணிகளை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடங்கி விட்டன. குறிப்பாக பூத் கமிட்டி ஏஜெண்டுகளை தயார்ப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நடிகர் விஜய்யும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
* முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி-ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி-சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும்-ஒன்றிய அரசுக்கும் உணர்த்தி-தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக ஆளுநரின் கையெழுத்தின்றி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தனது சட்டப் போராட்டம் மூலம் பெற்று, ஆளுநர் அடாவடியாக நிறைவேற்ற மறுத்த பத்து மசோதாக்களைச் சட்டமாக்கி சகாப்தம் படைத்து, "சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே"-"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே-நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
அதோடு, வரலாற்றில் மீண்டும் மாநில சுயாட்சிக்காக உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவினை நியமித்துள்ள கழகத் தலைவரும்-முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட செயலாளர்களின் இந்த கூட்டம் உவகையுடனும்-பெருமை பொங்கவும் பாராட்டுதலைப் பதிவு செய்து கொள்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022-இல் முதலிடம், ஏற்றுமதித் தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம்; மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; நாட்டிலேயே காவல்துறையில் அதிக பெண் அதிகாரிகள் பணிபுரியும் மாநிலம்; அதுமட்டுமல்ல-சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று திராவிட மாடல் அரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது.
மக்களை முன்னேற்றும் முத்திரைத் திட்டங்களான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'மகளிர் விடியல் பயணத் திட்டம்', 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்', 'தமிழ் புதல்வன் திட்டம்', 'நான் முதல்வன் திட்டம்', 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்', 'இல்லம் தேடிக் கல்வி', 'மக்களைத் தேடி மருத்துவம்' என அனைத்துத் திட்டங்களும்-தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும்-தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் முன்னோடியாகத் திகழ்வதை மற்ற மாநிலங்கள்கூட இன்று திரும்பிப் பார்க்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் இந்தச் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள்-224 பகுதிகள்-152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!" சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமத்துவம், சமூகநீதி, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காக்கும் மாபெரும் இயக்கமாக முன்வரிசையில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் நம் ஒப்பற்ற கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, வருகின்ற ஜூன் 1-ம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
மக்கள் மன்றத்திலும்-சட்டத்தின் துணைக் கொண்டும்; தி.மு.க. எதிர் கொள்ளும்!
நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறிக் குறுக்கிட்டு-அந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறித்து வருவதோடு-தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து-அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அ.தி.மு.க. போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை "பழிவாங்கும் நடவடிக்கை" எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து; இப்போது டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.






