என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் குடியிருப்பு கட்ட சட்ட விரோத அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம்- ஆர்.பி.உதயகுமார்
- 2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன.
- பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அங்கு ரூ.2000 கோடி அளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது.
சுற்றுச்சூழல் முக்கியதுவம் வாய்ந்த சதுப்பு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடியார் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெற்ற பின்னர் ரூ.100 கோடியளவில் முறைகேடு, லஞ்சம் கரைபுரண்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் ஈரப்பகுதிகளை காக்கும் வண்ணம் 1922 ஆண்டு ஈரானில் ராம்சார் என்ற சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டனர்.
2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன. தற்பொழுது 1,247 ஹேக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலையில் ஈர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 4-வது பிரிவுபடி ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது அனுமதி வழங்க முடியாது.
இந்த சூழ்நிலையில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதிகளில் 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி ஆகும்.
குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும். வடகிழக்கு பருவமழையில் நீரை உள்வாங்கி நிலத்தின் நீர் தன்மையை உயர்த்தும்.
தற்போது பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின் என்ன கூற போகிறார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலன் அடையப்போவது யார்? ஆகவே இன்றைக்கு முறைகேடு செய்து, ஊழல் செய்த இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி வரும். அப்போது இது போன்று சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.






