என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தி.மு.க. அரசு - ஆர்.பி. உதயகுமார்
- தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
- நெல்மணிகளை ரோட்டிலே போட்டு வைத்து, விவசாயிகளின் வயிற்றிலே அடித்துள்ளது இந்த அரசு.
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிறுவர்கள் காற்றில் பலூனை பறக்க விடுவார்கள். பட்டங்களை பறக்க விடுவார்கள். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் சிறு குழந்தை போல கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அவல நிலையைதான் ஒவ்வொரு பிரிவினரும் வேதனையோடு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவேன் என்று கூறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்து வாய் திறக்க மறுத்தார்.
எதிர்க்கட்சி தலைவராக ஓடோடி சென்று ஆறுதல் கூறிய அவர், இப்போது வாய் திறக்க மறுப்பதன் விபரம் என்ன என்று தெரியவில்லை.
தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்று கூறி வருகிறார்கள்.
புதிய டி.ஜி.பி. நியமனத்தில் தாமதம் ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்கள்.
ஒன்றரை மாதம் கழித்து அமைச்சர் ரகுபதி, டி.ஜி.பி. நியமனத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்கள்.
மதுரையில் ராஜினாமா செய்த மதுரை மேயருக்கு பதிலாக புதிய மேயரையும் தேர்வு செய்ய முடியவில்லை. டி.ஜி.பி.யையும் நியமனம் செய்ய தமிழக அரசால் முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும் தர முடியவில்லை.
ஆகவே இயலாத அரசு இருக்க வேண்டுமா? என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.
தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். எத்தனை லட்சம் டன் நெல் வீணானது என்று நமக்கே தெரியவில்லை.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று முன்கூட்டிய கணித்த பிறகும், இன்றைக்கு நெல்மணிகளை ரோட்டிலே போட்டு வைத்து, விவசாயிகளின் வயிற்றிலே அடித்துள்ளது இந்த அரசு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், காவல்துறையினர் என்று எல்லோருமே இந்த அரசு மீது அதிர்ச்சியில் இருக்கின்ற காரணத்தினாலே மக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கு 2026-ல் முகூர்த்தம் குறித்துள்ளார்கள்.
விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த பருவமழை காலத்தில் முதலிலே களத்திற்கு சென்ற ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






