என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை- ராமதாஸ்
- அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா, 3 மகள்கள், பேரக்குழந்தைகளுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார்.
- அன்புமணி ராமதாஸ், குடும்பத்தோடு தாயார் சரஸ்வதியிடம் ஆசி பெற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேர்தலுக்கான கூட்டணியையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் நான்தான் முடிவு செய்வேன் என ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் தந்தை- மகன் இடையே கருத்து மோதலும் ஏற்பட்டு வருவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த கருத்து மோதல் காரணமாக ராமதாசும், அன்புமணி ராமதாசும் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த மோதல் காரணமாக ராமதாசும், அன்புமணி ராமதாசும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிற நிலையில் சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். பதிலுக்கு ராமதாசும் சிறப்பு பொதுக்குழுவை நாளை கூட்ட உள்ளதாகவும், அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
நேற்று மாலை அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா, 3 மகள்கள், பேரக்குழந்தைகளுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது ராமதாஸ் உடன் இருந்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ், குடும்பத்தோடு தாயார் சரஸ்வதியிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து சில மணி நேரம் குடும்பத்தினருடன் அவர் பேசினார். அதன் பிறகு இரவு அன்புமணி ராமதாஸ் குடும்பத்தோடு தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சிலர் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை நிச்சயம் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.






