என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகன் ஏற்கனவே இடம் பிடித்துவிட்டதால் அ.தி.மு.க. கூட்டணியில் சேர ராமதாஸ் தயக்கம்
- பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.
சென்னை:
தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் மற்ற கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அதேநேரம் சிறிய கட்சிகள் எந்த கூட்டணியில் இணைவது? எந்த கூட்டணியில் இணைந்தால் என்னென்ன லாபம்? என்று கணக்கு போட்டு கூட்டணிகளில் இடம்பிடித்து வருகின்றன.
இப்போதைய நிலையில் எந்த கணக்கு போட்டாலும் தீர்வு கிடைக்காமல் தடுமாறுவது டாக்டர் ராமதாஸ்தான்.
பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது. நான்தான் அதிகாரப்பூர்வமான பா.ம.க. யாராக இருந்தாலும் என்னிடம்தான் கூட்டணி பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார்.
அதே நேரம் கட்சியும் என்னிடம்தான் உள்ளது. கட்சியின் மாம்பழம் சின்னமும் என்னிடமும்தான் உள்ளது என்று கூறி வரும் டாக்டர் அன்புமணி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறைப்பட அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டார். கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?, த.வெ.க.வா? எங்கு செல்வது என்று முடிவெடுக்க முடியாமல் டாக்டர் ராமதாஸ் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அங்கு அன்புமணி இருக்கிறாரே என்று யோசிக்கிறார். தி.மு.க. பக்கம் சென்றால் எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்ற சூழல். புதிய கட்சியான த.வெ.க.வுடன் இணைந்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று யோசிக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் அனைத்து தலைவர்களுடனும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். எந்த முடிவாக இருந்தாலும் வருகிற 22-ந்தேதிக்குள் ராமதாஸ் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.






