என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்
- தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும்.
- கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகிவிட்டது என்றும், புதிய தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 30-5-2025 முதல் ராமதாஸ் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் அன்புமணி ராமதாசே கட்சியின் தலைவராக உள்ளார்.
ராமதாஸ் கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இந்நிலையில், பா.ம.க.வை மீட்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குழு அமைத்துள்ளார். குழுவில் ஜி.கே.மணி, சதாசிவம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க ராமதாஸ் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






