என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சமூக வலைதள கணக்குகளை மீட்டு தர கோரி ராமதாஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
- அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது.
- எனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள்.
அன்புமணியின் ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்குவதும், நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதுமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.
இதனிடையே கும்பகோணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. தேவையென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இது பா.ம.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், லண்டனில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி எனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், தன் சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தர கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார். எக்ஸ் மற்றும் பேஸ்புக் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன. அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.






