என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது
    X

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 'திடீர்' மழையால் வெப்பம் தணிந்தது

    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
    • உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் சாரல் மழை பரவலாக பெய்தது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை சில நாட்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அணைகள் நீர் பிடிப்பு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. நாங்குநேரி, களக்காடு, அம்பை, ராதாபுரம் சுற்று வட்டாரங்களில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடியது.

    அதேநேரம் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்கள் இருக்கும் நிலையில், திடீர் மழையால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாநகரில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பூமி குளிர்ச்சி அடைந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக 12 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக வாட்டி வரும் கடுமையான வெயிலுக்கு நடுவே இன்று காலை 6 மணிக்கு திடீரென வானில் கருமேக கூட்டங்கள் கூடின. தொடர்ந்து சில நிமிடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் திடீர் மழை பெய்தது.

    தூத்துக்குடி முத்தையாபுரம், விமான நிலையம் பகுதி மற்றும் புதுக்கோட் டையில் கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணி வரையிலும் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் ஏராளமான உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்தது.

    இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் மிக அதிகமாக தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் 88 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் 67 மில்லி மீட்டர் மழையும், புதுக்கோட்டையில் 47 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம், முடிவைத்தானேந்தல், விட்டிலாபுரம், வல்லநாடு, ஓட்டப்பிடாரம், பன்னம்பாறை என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி, நாளை அதிகாலை நேரம் வரையிலும், குறிப்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×