என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை- திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்ததால் 'குளுகுளு' சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை வரை மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீர் திடீரென மழை பெய்தது.
கன்னியாகுமரி பகுதியிலும் மழை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கொட்டாரம், மயிலாடி, இரணியல், குழித்துறை, தக்கலை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு திரளாக வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்தது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது. அணைக்கு 874 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 477 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.04 அடியாக உள்ளது. அணைக்கு 745 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 20.50 அடியாக உள்ளது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் கரை திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 41, பெருஞ்சாணி 47.6, சிற்றார்1-55.4, சிற்றார் 2-46.6, கொட்டாரம் 26.6, மயிலாடி 2.6, நாகர்கோவில் 13, ஆரல்வாய்மொழி 4, முக்கடல் 5.8, பாலமோர் 12.2, தக்கலை 11, குளச்சல் 14, இரணியல் 8, அடையாமடை 12.4, குருந்தன் கோடு 11, கோழிப்போர்விளை 8, மாம்பழத்துறையாறு 26.6, ஆணைக்கிடங்கு 25, களியல் 40, குழித்துறை 10.8, புத்தன் அணை 42.8, சுருளோடு 34.2, திற்பரப்பு 48.6, முள்ளங்கினாவிளை 6.4.






