புதுவை பல்கலைக்கழக மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை.. போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள் கைது

பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுவை பல்கலைக்கழக மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை.. போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள் கைது
Published on

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com