என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு அலுவலர்கள் குடியிருப்பு பெயர் பலகையில் தமிழில் தவறாக எழுதப்பட்டு உள்ளதை காணலாம்.
கோத்தகிரி அரசு அலுவலர்கள் குடியிருப்பில் தமிழில் தவறாக எழுதப்பட்ட பெயர் பலகை
- கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
கோத்தகிரி:
கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. மிகவும் பழமையான அந்த குடியிருப்புகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன. எனவே, பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு, அதே பகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இதேபோல கோத்தகிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி, தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் (தாசில்தார் குடியிருப்பு உள்பட) என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு அலுவலர்கள் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பின் பலகையில் குடியிருப்பு பெயர் தமிழில் தவறாக எழுதப்பட்டு உள்ளது. அதாவது அரசு அலுவலர்கள் குடியிருப்பு என எழுதுவதற்கு பதிலாக 'அரசு அலுவலரகள குடியிருப்பு' என புள்ளி வைக்காமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், அரசு குடியிருப்பில் பெயர் பலகை எழுத்து பிழையுடன் எழுதப்பட்டு உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அதை திருத்தி, சரியாக எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






