என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை அரியணையில் இருந்து இறக்கும் வேள்வி பயணம்- தனது பயணத்தின் வெற்றி பற்றி நயினார் நாகேந்திரன் அறிக்கை
- இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன்.
- நிறைவு விழாவிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வை ஆட்சி அரியணையில் இருந்து இறக்கி தமிழகத்தை மீட்டெடுக்கும் நமது வேள்விப் பயணமான "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" என்ற யாத்திரையின் நிறைவு விழாவிற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மனதார வரவேற்கிறேன்.
இப்பெருவிழவில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு நமது தாமரை சொந்தங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் மனமெங்கும் நிறைந்திருக்கும் மீனாட்சி அம்மனின் அருளாசியோடும் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் தி.மு.க.விற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடும். கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதியன்று சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இருந்து நமது வேள்வி யாத்திரையைத் தொடங்கினோம். தி.மு.க. அரசின் கோரப் பிடியில் சிக்கி நிலைகுலைந்து கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த யாத்திரைக்குத் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" எனப் பெயர் சூட்டினோம்.
கடந்த 84 நாட்களில் சுமார் 2400 கி.மீ-க்கும் அதிகமாகப் பயணித்து. 52 அமைப்பு மாவட்டங்களுக்கும் 33 அலுவல் மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடம் நேரடியாக உரையாடி இருக்கிறோம். நம்மை முடக்க நினைத்த தி.மு.க. அரசின் அத்தனை அடக்கு முறைகளையும் முறியடித்து கிட்டத்தட்ட 47-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும் 34-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களையும் நடத்தி உள்ளோம்.
காற்றுக்கு ஓய்வேது. நீருக்கு சோர்வேது என்பது போல. கொஞ்சம் கூட களைப்பு தட்டாமல் இந்த யாத்திரையின் அனைத்துப் பணிகளையும் தேனீக்களின் சுறுசுறுப்புடன் முன்னின்று செய்ததோடு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இப்பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக மாற்றி உள்ளனர் நமது கட்சி நிர்வாகிகள். நமது தொண்டர்களின் அன்பையும். நிர்வாகிகளின் கடின உழைப்பையும், மூத்த தலைவர்களின் அர்ப்பணிப்பையும் கண்டு இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன். கர்வம் கொண்டேன்.
"இப்படை தோற்கின், எப்படை வெல்லும்" என்பதை நமது ஒற்றுமையின் மூலம் மீண்டுமொருமுறை நாம் நிரூபித்துள்ளதைக் கண்டு சொல்ல முடியாத ஆனந்தத்தில் திளைத்து உள்ளேன்.
இவ்வாறு நமது தாமரை சொந்தங்களின் நெஞ்சுரத்தாலும், விடா முயற்சியாலும் வரலாறு காணாத வெற்றி பயணமாக மாறிய இந்த வேள்வித் தவத்தின் நிறைவு விழாவிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம்.
கடந்த மூன்று மாதங்களாக ஓடி இளைத்த நமது வியர்வைத் துளிகளின் மீது சூடப்படும் மணிமகுடம் உலகம் வியக்கும் அரசியல் சாணக்கியரான அமித்ஷா கலந்து கொண்டு நம்மைச் சிறப்பிக்கும் உயர்வான அத்தருணத்தை நாம் ஆற, அமர முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
எனவே இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில், நமது கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நமது வெற்றியின் முழக்கத்தை ஊரறியச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.






